முனைவர் சுமதி
இன்று வரை மருத்துவமே கண்டறியப்படாத தசைச்சிதைவு
நோயால் இளவயதிலேயே பாதிப்படைந்தவர். இந்நோய்க்கு சிகிச்சை மேற்கொள்ள முனைவது கண்ணுக்குத் தெரியாத எதிரியிடம் சண்டையிடுவது போன்றதொரு கொடிய நிகழ்வு. எனினும், இதயத்தில் பெற்ற நம்பிக்கையின் வீரியத்தை இழக்காமல் கல்வியை கைத்துணையாகக்கொண்ட மகத்தான தன்னம்பிக்கையாளர்.திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வணிகவியல் விரிவுரையாளராக இணைந்து, சுமார் இருபத்தேழு ஆண்டுக்காலம் ஆசிரியப் பணியாற்றிய பின்னர் விருப்ப ஓய்வு பெற்று நெல்லை மாவட்ட அமர்சேவா சங்கத்தின் முழுநேர தன்னார்வ தொண்டராக தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர்.
சக்கர நாற்காலியிலேயே வலம்வரத்தக்க உடல்நிலையை கொண்டபோதிலும், ''ஊக்கமது கைவிடேல்' எனும் கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்தபடி, நல்ல செயல்பாடுகளின் விளைவால் உருவாகும் மனமகிழ்வின் துணையோடு மரணத்தைப் புறந்தள்ளும் மனவல்லமையாளர்.
ஆசிரியப்பணியின் வாயிலாக தானடைந்த அனுபவச்சோகங்களைப் பயன்படுத்தி, உடற்குறையுள்ள பலரை வாழ்வியல் பாதையில் முன்னேறச் செய்யும் நோக்கோடு சேவைப்பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார். தென் தமிழகத்தில் உடல் ஊனமுற்றோரின் மிகப்பெரிய மறுவாழ்வுக் கேந்திரமாகத் திகழும், அமர்சேவா சங்கத்தின் செயலாளாரான திரு.எஸ்.சங்கரராமன் அவர்களின் உடன் பிறந்த சகோதரி என்பது இவரின் தனித்த அடையாளம்.

No comments:
Post a Comment