Wednesday, December 30, 2009


கோவை ஞானி

கோவையில் தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவரின் வயது எழுபத்து ஐந்தை கடந்தாலும், தொடர்ந்து தமிழ்ப்ப‌ணியாற்றி வருகிறார். இருபத்தைந்து நூல்களுக்கு மேல் வெளியிட்டுள்ள முதுபெரும் படைப்பாளியான இவர் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக நிகழ், பரிமாணம், தமிழ் நேயம் ஆகிய இதழ்க‌ளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்க சிறப்பம்சம்.

க‌ண்பார்வையிருந்த‌ போது இர‌ண்டு கவிதை நூல்க‌ளை ம‌ட்டுமே வெளியிட்டிருந்த‌ இவ‌ர், 'க‌விச்சித‌ற‌ல்' தொகுப்பின் அறிவிப்பைக் கண்டு நூலில் பங்கேற்றிருப்பது சிறப்பான செய்தி. மார்க்சிய‌ நோக்கில் த‌மிழில‌க்கிய‌ ஆய்வை செவ்வ‌னே மேற்கொண்டுள்ள‌ இவ‌ரின் இருப‌தாண்டுகால‌ பார்வையின்மைக் குறையை த‌ன் உத‌வியாளர் மற்றும் ந‌ண்ப‌ர்க‌ளின் துணையோடு அக‌ற்றி, த‌மிழ‌ன்னையை நோக்கி தள‌ராது ந‌டைப‌யின்று வ‌ருகிறார்.

கர்ணன்

மதுரையில் பிற‌ந்த இவர் தையற்கலைஞ‌ராக பணியாற்றிக் கொண்டே முன்னூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், தொடர் கதைகள், குறுநாவல்கள், கவிதைகள், கட்டுரைகள், சுதந்திரப் போராட்ட வரலாறுகள் என தமிழின் பல்வேறு எழுத்து வடிவங்களிலும் தன்னுடைய பங்களிப்பை ஈந்தளித்துள்ளார். இளம் வயதிலேயே இளம்பிள்ளைவாத பாதிப்பால் கால் செயலிழந்தாலும் தனது எழுத்தின் வழியாக‌ பெற்ற மதிப்பு மிகுதி. "ஊனமுற்றோரின் உயரிய சாதனைகள்" நூலில் இடம் பெற்ற சாதனையாளர்.

"கனவுப் பறவை", "கல்மனம்", "மறுபடியும் விடியும்", "முகமற்ற ம‌னிதர்கள்", "அவர்கள் எங்கே போனார்கள்" போன்றவை உட்பட முப்பதிற்கும் மேற்பட்ட சிறந்த புத்தகங்களை எழுதியவர். இவரின் பல நூல்கள் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பாடத்திட்டமாக வைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது கூடுதல் செய்தி.

சு.அமுதசாந்தி

மதுரையில் தியாகம் பெண்கள் அறக்கட்டளையைத் துவக்கி, கிராமப்புறங்களில் வாழும் மாற்றுத்திறன் பெண்களுக்கு தையல் தொழில், கணினி அறிவு போன்றவற்றைப் பயிற்றுவித்து, அவர்களின் மனங்களில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி, அவர்களுக்கான பொருளாதார சுதந்திரத்தை உருவாக்கும் அற‌ப்பணியை மேற்கொண்டு வருகிறார்.

ஹெலன் கெல்லர், தன்னம்பிக்கை சிகரம், சிறந்த சமூகப்பணியாளர் போன்ற விருதுகளைப் பெற்றுள்ள இவர் இடக்கை குறைபாட்டுடன் பிறந்தவர். ஏழாம் வகுப்பிலேயே சிறந்த கட்டுரையெழுதி முதல்வரிடம் பரிசு பெற்றுள்ளதோடு 'ஊனமுற்றோரின் உயரிய சாதனைகள்' நூலிலும் இடம் பெற்ற சாதனையாளாராக திகழ்பவர்.


கோ.க‌ண்ண‌ன்

த‌மிழ் நாவ‌ல்க‌ளில் த‌லைமுறை இடைவெளி எனும் த‌லைப்பில் ஆய்வு மேற்கொண்டு தர்ம‌புரி மாவ‌ட்ட‌த்தின் முத‌ல் பார்வைய‌ற்ற‌ முனைவ‌ராக‌ சிற‌ப்பிக்க‌ப்ப‌ட்ட‌ இவ‌ர், 'ஓசைக‌ளின் நிற‌மாலை', 'மழைக்குடை நாட்க‌ள்' போன்ற‌ க‌விதை நூல்க‌ளை வெளியிட்டுள்ள‌ கவிஞ‌ராக‌வும் த‌ன்னை அடையாளித்துக் கொண்டுள்ளார். த‌ர்ம‌புரி அர‌சு க‌ல்லூரியில் த‌மிழ்த்துறை இணைப் பேராசிரிய‌ராக தற்போது பணியாற்றி வ‌ருகிறார்.

ஒரு ப‌டைப்பாளி த‌ன்னுட‌லின் ஐம்புல‌ன்க‌ளை கூர்மைப்ப‌டுத்தி, தான் க‌ண்ட‌டைகிற் நிக‌ழ்வுக‌ளுக்குள் உட்புகுந்து, சிந்த‌னாவ‌ய‌ப்ப‌ட்டு, த‌ன்னை பாதிக்கிற‌ நுண்ணிய‌ நிக‌ழ்வுக‌ளையே ப‌டைப்பில‌க்கிய‌மாக‌ உயிர்ப்பிக்க‌ இய‌லும் என்கிற‌ கால‌ங்கால‌மான‌ நிய‌தியை மாற்றிய‌மைத்த‌ ப‌டைப்பாளியான‌ இவ‌ர், 'ஊன‌முற்றோரின் உய‌ரிய சாத‌னைகள்' நூலிலும் இட‌ம் பெற்ற‌ சாத‌னையாள‌ர்.

இரா.சும‌தி

சிறுவ‌ய‌திலிருந்தே நாட்குறிப்பு எழுதிய‌ அனுப‌வ‌முடைய‌வ‌ராக‌ இருந்த‌தால் த‌ன‌து எழுத்தின் மூல‌ம் ந‌வீன‌ வார்த்தைக‌ளை அறிமுக‌ப்ப‌டுத்திக் கொண்ட‌வ‌ருக்கு தான் ச‌ந்திக்க‌ நேர்ந்த‌ நிக‌ழ்வுக‌ளை காலத்தின் ப‌திவுக‌ளாய் க‌விதையாய் உருவாக்குவ‌து எளிதான‌து.

இளம்பிள்ளைவாத‌ பாதிப்பால் ஊன‌ம‌டைந்த‌ இவர் ம‌ன‌வ‌லிக‌ளிலிருந்தும் மீண்டு ச‌மூக‌ம் குறித்து சிந்திக்க‌, ஆன்மீக‌ அனுப‌வ‌ங்க‌ளை ப‌கிர் ந்து கொள்ளும் நோக்கில் இவ‌ரின் க‌வியாற்ற‌ல் வெளிப்ப‌டுகிற‌து.

சே.ஜெய‌க்குமார்

பெர‌ம்ப‌லூரில் பிற‌ந்த‌ இவர், த‌ற்போது ம‌ருந்தாளுன‌ராக‌ பெங்க‌ளூருவில் ப‌ணியாற்றுகிறார். கலை ஆர்வ‌மும், ச‌மூக‌ ந‌ல‌ச்சிந்த‌னைக‌ளும் மிகுந்து காண‌ப்ப‌டும் இவர், இள‌வ‌ய‌திலேற்ப‌ட்ட‌ போலியோ பாதிப்பின் கார‌ண‌மாக‌ இரண்டு கால்க‌ளும் பாதிப்ப‌டைந்தவ‌ர்.

சங்க‌ட‌ங்க‌ளை ச‌கித்துக் கொள்ளும் திற‌னும், விடா முய‌ற்சியும் கொணட‌ இவ‌ரின் உள்ள‌த்து இய‌ல்பை, ந‌தியின் நீரோட்ட‌த்துக்கு ஒப்பிட‌லாம். 'சாத‌னை ப‌டைக்கும் ஊன‌முற்ற‌வ‌ர்க‌ள்‍‍ பாகம் 1' புத்த‌க‌த்தில் இட‌ம் பெற்ற‌ சாத‌னையாள‌ர்.

எழில் அரசன்

கலைத்துறையில் ஆர்வம் கொண்டதன் காரணமாக கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் அதிகமான‌ கவிதைக‌ளை எழுதிவைத்தும், வெளியிட வாய்ப்பின்மையால் தன்னுடைய திறமையை முடக்கி வைத்துக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார்.

ஒரு விபத்தில் வலக்கையை இழந்த போதிலும், மற்றையோருக்கு வழிகாட்டும் விதமாக‌ சென்னையிலுள்ள மாஸ் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வருவதுடன், சமூக சேவையியலில் முதுகலை பட்டம் பயின்று வருகிறார்.