Tuesday, March 24, 2009

தன்னம்பிக்கை சகோதரிகள்

தசைச்சிதைவு நோயின் கொடுமையான கோரப்பிடியில் சிக்குண்டு ஒரே குடும்பத்தில் அக்காவான வானவன் மாதேவி, தங்கையான இயல் இசை வல்லபியும் பாதிப்படைந்தது காணச் சகியாத அவலம்.

உடலின் இயக்கு தசைகளான கை, கால்கள் போன்றவற்றில் தசைச்செல்கள் கொஞ்ச கொஞ்சமாய் நசிவடைந்து, நடமாட்டம் தொய்வுற்று, செயல்பாடுகள் தொலைந்து போய், விரல்கள் மட்டுமே செயல்படும் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இந்த சகோதரிகள். அப்படிப்பட்ட வேதனைச் சூழலிலும் கூட, வெறுமனே நட்களை நகர்த்தி மரணத்தை முத்தமிடத்தோன்றாமல் வாழ்ந்து பார்க்கவும், தங்களின் எஞ்சிய நாட்களை பயனுள்ளதாக மாற்றவும் மேற்கொண்ட‌ முனைப்பு அவர்களை சேவையமைப்பு ஒன்றினை துவக்கிட தூண்டியிருக்கிறது.

சமுதாயத்தால் புறக்கணிக்கப்படுபவர்களை அரவணைத்து நல்வழிகாட்டும் எண்ணத்தோடு இவர்கள் தங்களின் சொந்த ஊரான சேலத்தில் துவக்கியுள்ள அமைப்பை வழிகாட்டி நடத்திட, நெல்லை மாவட்டத்தின் மிகப்பெரிய ஊனமுற்றோர் மறுவாழ்வு கேந்திரமாகத் திகழும் அம்ர்சேவா சங்கத்தின் தலைவரான ஐயா ராமகிருஷ்ணன் அவர்கள் ஒப்புக்கொண்டிருப்பது இச்சகோதரிகளின் சமூகச்செயல்பாட்டின் மீதான நல்ல நம்பிக்கையை வளர்க்கிறது.

தோல்விகளைக் கண்டாலே துவண்டு போகும் மனிதர்களுக்கு மத்தியில், மரணத்தின் வாயிற்படியில் நிற்கும்போதும் தங்கள் நிலைகண்டு மயங்காமல், சமூகத்தின் நிலைக்காக சிந்தித்து, நல்ல தோழமைகளின் துணையுடன் சேவைச் செயலாற்ற முனையும் இந்த தன்னம்பிக்கைச் சகோதரிகளை எண்ணும்போது உண்மையிலேயே பெருமிதமாயிருக்கிறது.

மாணவி பிரியா

மனிதமனம் உணர்ச்சி வயப்படும் ஒற்றை நொடியில் ஆயிரமாயிரம் குற்றங்கள் நடந்தேறிவிடுகின்றன. அத்தகு குற்றச்சூழலில் அறிந்தோ, அறியாமலோ சிக்குண்டு சிறைக்கம்பிகளுக்கு பின்னால் வாழ்க்கையை நடத்த நேரிடுகிற சிறைவாசிகளின் (குற்றவாளிகள்) வாழ்க்கையிலிருந்து சமூகம் அறியவேண்டிய செய்திகளை நம்முன் பட்டியலிட்டுக் காண்பிக்கிறார் பார்வையற்ற M.Phil., மாணவி செல்வி. பிரியா.

மதுரையை சேர்ந்த இவர் தன்னுடைய பார்வை குறைப்பாட்டு சங்கடத்தையும் மீறி, தமிழக சிறைத்துறை வரலாற்றிலேயே முதன்முறையாக சிறப்பு அனுமதி பெற்று சிறைவாசிகளிடம் ஆய்வை மேற்கொண்டார். M.A., பட்டம் பயிலும்போது, 'மனித உரிமைகள்' பாடப்பிரிவின் கீழ் மதுரை மத்தியச் சிறையிலிருந்த ஆயுள் தண்டனை பெற்ற 80 கைதிகளிடம் சிறை வாழ்க்கை குறித்தும், மாற்றம் பெற்ற மனவுணர்வுகள் பற்றியும் ஆய்வை மேற்கொண்டார்.

அந்த ஆய்வு விளைவுகளின் அடிப்படையில் இளமுனைவர் (M.Phil)ஆய்வை பெண் கைதிகளின் வாழ்வியல் நிலை குறித்து அறிந்து கொள்ளும் முனைப்போடு மேற்கொண்டார். வேலூர் மத்திய சிறைச்சாலையிலிருந்த பெண் சிறைக்கைதிகளை தேர்வு செய்து அவர்களை நேரில் சந்தித்து கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்று அத‌னடிப்படையில் தன் ஆய்வுக்கட்டுரையை விருதுநகர் வன்னியப் பெருமாள் மகளிர் கல்லூரியில் சமர்ப்பித்துள்ளார்.

தனக்கான பார்வையின்மை குறையையும் மீறி, தன் கல்வியின் துணையோடு சமூகத்தில் கைதிகள் பற்றிய எண்ண மாறுபாட்டை உருவாக்கிட முனையும் மாணவி பிரியா பெற்றுள்ள சாதனையாளர் விருதும், கல்விச் சாதனையாள‌ர் விருதும் அவரின் எதிர்கால கல்வியார்வத்தை அடையாளம் காண்பிக்கின்றன.

ஓவியக்கலைஞர் பிரபாவதி

உடலியல் சார்ந்த சங்கடங்களால் உருகிப்போய்விடாமல் தங்களின் மனதரியத்தைக் காத்துக் கொள்பவர்கள் மிக்க்குறைவு. அத்தகைய மிகச்சிலரில் ஒருவர்தான் சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த செல்வி பிரபாவதி.

குழந்தை பருவத்திலேயே தன்னை பாதித்த ''ஆஸ்டியோ ஜெனிஸிஸ் இன்பெர்பெக்டா'' எனும் எலும்பு சார்ந்த நோயின் கோரப்பிடியிலிருந்து மீளும் வழியறியாமல் தொடர்ந்த மருத்துவ சிகிச்சைகளின் விளைவால் உடலின் அமைப்பே உருக்குலைந்து போக, மனதின் நம்பிக்கை மட்டும் இன்னமும் மங்கிபோகாமல் இருக்கிறது.

முப்பது வயதைக்கடந்தபோதிலும் உடலமைப்பில் மூன்று வயதுக்குழந்தைக்குரிய இரண்டரை அடி உயரமே கொண்டிருக்கிறார். இடப்பெயர்வு மொத்தமும் இன்னொருவர் துணையோடு நடக்க வேண்டிய நிலையிலும் தன்னுள் துளிர்த்த ஓவியக்கலையை பயன்படுத்தி தஞ்சாவூர் ஓவியம், ரிவர்ஸ் கிளாஸ் பெயிண்டிங், பானை ஓவியம், டேட்டூ ஓவியம் என்று பலவித கைவண்ணங்களால் தன் உணர்வுகளை வெளிப்படுத்திட கற்றுக் கொண்டார்.

கடந்த 2006 இல் மேதகு ஆளுநர் சுர்ஜித் சிங் ‍பர்னாலா கரங்களால் சாதனைப்பெண்மணி விருது பெற்ற நிகழ்வு இவரின் உன்னத வாழ்க்கையை ஊருக்கு உணர்த்தியது. வண்ண‌ங்களால் வாழும் இந்த‌ சின்ன பெண்ணிடம் உலகத்தினர் கற்றுக்கொள்ள வேண்டிய நம்பிக்கைப் பாடங்கள் அநேகம்.

வளரும் எழுத்தாளர் சாந்தி ராபர்ட்ஸ்

உதகமண்டலத்தைச் சேர்ந்த சாந்தி ராபர்ட்ஸ். இளவயதிலேயே ரிக்கெட்ஸ் எனப்படும் எலும்பு தொடர்பான நோயால் பாதிப்படைந்தார். இவருக்கு வாய்த்த அற்புதமான உறவுகளும், தோழமைகளும் இவரை சிகிச்சைகளுக்காக பல்வேறு ஊர்களுக்கு அழைத்துச் சென்றும், பலப்பல அறுவை சிகிச்சைகள் செய்தும் இவரைக் காத்தன.

கல்வியில் மீதான ஆர்வம் இவரை அடுத்தடுத்த கட்டங்களுக்கு உயர்த்திச் செல்ல, நிறுவனத்தில் கிடைத்த வேலைவாய்ப்பும் வாழ்வின் மீதான பிடிமானத்தை அழுத்தமாக்கியது. விளைவாய் தன்னுடைய ஓய்வு நேரங்களை சமூகத்துக்குப் பயனுள்ளதாக்கும் முயற்சிகளில் ஈடுபடலானார். ஒரு கட்டத்தில் பணிபுரிந்த நிறுவனத்தின் ஆட்குறைப்பு கொள்கையால் பாதிப்புற்ற போதிலும் கர்த்தரின் துணையோடு கலக்கங்களைக் கடந்தார்.

இயல்பிலேயே ஊற்றெடுத்த எழுத்தார்வத்தின் துணையோடு சமூக சங்கடங்களுக்காக குரல் கொடுக்க முனைந்தபோது அரசுப்பொறுப்புகளின் தட்டிக்கழித்தல்கள் சங்கடங்களித்தன. எனினும், பொதுமக்களின் நலன் கருதி தன் முயற்சியை கைவிடாமலிருக்கிறார். இவரின் தொடர்முயற்சிகளால், நடைபெற்ற நல்லவைகளின் எண்ணிக்கை கூடியபோதுதான் தன் எழுத்தின்மீது இவருக்கு நம்பிக்கை பிறந்தது என்று சொல்லலாம்.

இன்று பல்வேறு சிற்றிதழ்களிலும் உள்ளூர் ஊடகங்களிலும் கதை, கட்டுரை, கவிதை என வலம்வரும் இவரின் எழுத்துக்களில் வாழ்க்கைப்பாதையில் தொலைதூர வெளிச்சப்புள்ளிகள் தென்படுகின்றன.

முனைவர் ராதாபாய்

உடற்குறையுற்ற பெண்மணிகளுக்கு நல்ல மணவாழ்க்கை அமைவது சாத்தியமில்லை எனும் கூற்றைப் பொய்யாக்கியபடி, மகத்தான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் புதுக்கோட்டை ராதாபாய். இவர் 'தமிழகத்தில் பார்வையற்றோரின் நிலையும், மறுவாழ்வும்' எனும் தலைப்பில் ஆய்வு செய்து, 1991 ஆம் ஆண்டில் முனைவர் பட்டத்தை பெற்றார். இதன்மூலம் 'தென்னிந்தியாவிலேயே முனைவர் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற் பெண்மணி' இவர்தான் என்பது இவரின் முயற்சிக்கு கிடைத்த கூடுதல் சிறப்பு.

இளவயதிலேயே பார்வையை இழந்துவிட்டபோதிலும், புதுக்கோட்டை மாநகரத்தின் புகழ் மாமணிகளில் ஒருவராகத் திகழ்கிறார். புதுக்கோட்டை மகளிர் கலைக்கல்லூரியில், வரலாற்றுத்துறைத்தலைவராகப் பணியாற்றியபடி, பல்துறைச் சார்ந்த மேடைப்பேச்சுக்கலையிலும் வல்லவராக வலம்வரும் இவரின் கண்கண்ட துணையாகத் திகழ்கிறார் கணவர் திரு. லட்சுமி நாராயணன்.

தன்னம்பிக்கைப் பெண்மணி, கருத்தொளிச் செம்மல், நல்லாசிரியர், கவிநிலவு, சிறந்த பெண்மணி, சாதனைப் பெண்மணி, சமூகப்பணிக்கான அன்னை தெரசா விருது எனப்பல விருதுகளைப் பெற்று, சாதனைபுரிய உடற்குறை ஒரு தடையல்ல என உலகிற்கு உணர்த்தியபடி வாழ்ந்து வருகிறார்.

ஜெனிதா

கறுப்பும் வெள்ளையும் சரிவிகிதத்தில் கலந்திருக்கிற சதுரங்க களத்தில், வெற்றிக்கோப்பைகளைத் தட்டிப்பறிக்க தவழ்ந்தே செல்ல நேர்ந்தாலும் கூட உடற்குறை ஒரு பொருட்டே அல்ல என்கிற உண்மையை தன்னுடைய வாழ்க்கையின் மூலமாக உணர்த்தியபடி வலம்வருகிறார் செல்வி.ஜெனிதா.

தந்தை காணிக்கை இருதயராஜின் கனவுகளை நனவாக்கும் முனைப்போடு, சதுரங்க விளையாட்டில் சர்வதேச அளவில் முத்திரை பதித்து வருகிறார். மனதுக்குள் நம்பிக்கை பூ பூத்தால் போர்க‌ளங்களும் கூட புன்னகை தேசங்க‌ள் தான் என்றுரைப்பது போல மாறாத புன்னகை இவரின் முகத்தில் குடிகொண்டிருக்கிறது.

சர்வதேச அளவில் சதுரங்க உலகில் வழங்கப்படும் உயரிய WIM (World International Master) விருது பெற்ற இந்தியாவின்ன் ஒரே உடல் ஊனமுற்ற வீராங்கனை, 2008.இல் ஜெர்மனில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற ஊனமுற்ற ஒரே இந்திய வீராங்கனை என்பன போன்ற உயரிய தகுதிகளை பெற்றுள்ள இவரின் வாழ்க்கை நம்பிக்கையின் வலிமையை சொல்லித் தருகிறது.

பத்துவயதில் விளையாடத்துவங்கி, குறுகிய காலத்தில் இவர் அடைந்துள்ள வளர்ச்சி பிரமிப்புக்குரியது. உடல் ஊனமுற்ற விளையாட்டு வீரர்கள் மட்டும் பங்கேற்கும்படியான சதுரங்கப் போட்டிகள் இந்தியாவிலும் நடத்தப்படவேண்டுமென்ப‌து திருச்சியில் வாழும் இவரின் எதிர்க்காலக்கனவு.
முனைவர் சுமதி

இன்று வரை மருத்துவமே கண்டறியப்படாத தசைச்சிதைவு நோயால் இளவயதிலேயே பாதிப்படைந்தவர். இந்நோய்க்கு சிகிச்சை மேற்கொள்ள முனைவது கண்ணுக்குத் தெரியாத எதிரியிடம் சண்டையிடுவது போன்றதொரு கொடிய நிகழ்வு. எனினும், இதயத்தில் பெற்ற நம்பிக்கையின் வீரியத்தை இழக்காமல் கல்வியை கைத்துணையாகக்கொண்ட மகத்தான தன்னம்பிக்கையாளர்.

திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வணிகவியல் விரிவுரையாளராக இணைந்து, சுமார் இருபத்தேழு ஆண்டுக்காலம் ஆசிரியப் பணியாற்றிய பின்னர் விருப்ப ஓய்வு பெற்று நெல்லை மாவட்ட அமர்சேவா சங்கத்தின் முழுநேர தன்னார்வ தொண்டராக தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர்.

சக்கர நாற்காலியிலேயே வலம்வரத்தக்க உடல்நிலையை கொண்டபோதிலும், ''ஊக்கமது கைவிடேல்' எனும் கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்தபடி, நல்ல செயல்பாடுகளின் விளைவால் உருவாகும் மனமகிழ்வின் துணையோடு மரணத்தைப் புறந்தள்ளும் மனவல்லமையாளர்.

ஆசிரியப்பணியின் வாயிலாக தானடைந்த அனுபவச்சோகங்களைப் பயன்படுத்தி, உடற்குறையுள்ள பலரை வாழ்வியல் பாதையில் முன்னேறச் செய்யும் நோக்கோடு சேவைப்பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார். தென் தமிழகத்தில் உடல் ஊனமுற்றோரின் மிகப்பெரிய மறுவாழ்வுக் கேந்திரமாகத் திகழும், அமர்சேவா சங்கத்தின் செயலாளாரான திரு.எஸ்.சங்கரராமன் அவர்களின் உடன் பிறந்த சகோதரி என்பது இவரின் தனித்த அடையாளம்.