Wednesday, December 30, 2009


கோவை ஞானி

கோவையில் தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவரின் வயது எழுபத்து ஐந்தை கடந்தாலும், தொடர்ந்து தமிழ்ப்ப‌ணியாற்றி வருகிறார். இருபத்தைந்து நூல்களுக்கு மேல் வெளியிட்டுள்ள முதுபெரும் படைப்பாளியான இவர் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக நிகழ், பரிமாணம், தமிழ் நேயம் ஆகிய இதழ்க‌ளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்க சிறப்பம்சம்.

க‌ண்பார்வையிருந்த‌ போது இர‌ண்டு கவிதை நூல்க‌ளை ம‌ட்டுமே வெளியிட்டிருந்த‌ இவ‌ர், 'க‌விச்சித‌ற‌ல்' தொகுப்பின் அறிவிப்பைக் கண்டு நூலில் பங்கேற்றிருப்பது சிறப்பான செய்தி. மார்க்சிய‌ நோக்கில் த‌மிழில‌க்கிய‌ ஆய்வை செவ்வ‌னே மேற்கொண்டுள்ள‌ இவ‌ரின் இருப‌தாண்டுகால‌ பார்வையின்மைக் குறையை த‌ன் உத‌வியாளர் மற்றும் ந‌ண்ப‌ர்க‌ளின் துணையோடு அக‌ற்றி, த‌மிழ‌ன்னையை நோக்கி தள‌ராது ந‌டைப‌யின்று வ‌ருகிறார்.

கர்ணன்

மதுரையில் பிற‌ந்த இவர் தையற்கலைஞ‌ராக பணியாற்றிக் கொண்டே முன்னூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், தொடர் கதைகள், குறுநாவல்கள், கவிதைகள், கட்டுரைகள், சுதந்திரப் போராட்ட வரலாறுகள் என தமிழின் பல்வேறு எழுத்து வடிவங்களிலும் தன்னுடைய பங்களிப்பை ஈந்தளித்துள்ளார். இளம் வயதிலேயே இளம்பிள்ளைவாத பாதிப்பால் கால் செயலிழந்தாலும் தனது எழுத்தின் வழியாக‌ பெற்ற மதிப்பு மிகுதி. "ஊனமுற்றோரின் உயரிய சாதனைகள்" நூலில் இடம் பெற்ற சாதனையாளர்.

"கனவுப் பறவை", "கல்மனம்", "மறுபடியும் விடியும்", "முகமற்ற ம‌னிதர்கள்", "அவர்கள் எங்கே போனார்கள்" போன்றவை உட்பட முப்பதிற்கும் மேற்பட்ட சிறந்த புத்தகங்களை எழுதியவர். இவரின் பல நூல்கள் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பாடத்திட்டமாக வைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது கூடுதல் செய்தி.

சு.அமுதசாந்தி

மதுரையில் தியாகம் பெண்கள் அறக்கட்டளையைத் துவக்கி, கிராமப்புறங்களில் வாழும் மாற்றுத்திறன் பெண்களுக்கு தையல் தொழில், கணினி அறிவு போன்றவற்றைப் பயிற்றுவித்து, அவர்களின் மனங்களில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி, அவர்களுக்கான பொருளாதார சுதந்திரத்தை உருவாக்கும் அற‌ப்பணியை மேற்கொண்டு வருகிறார்.

ஹெலன் கெல்லர், தன்னம்பிக்கை சிகரம், சிறந்த சமூகப்பணியாளர் போன்ற விருதுகளைப் பெற்றுள்ள இவர் இடக்கை குறைபாட்டுடன் பிறந்தவர். ஏழாம் வகுப்பிலேயே சிறந்த கட்டுரையெழுதி முதல்வரிடம் பரிசு பெற்றுள்ளதோடு 'ஊனமுற்றோரின் உயரிய சாதனைகள்' நூலிலும் இடம் பெற்ற சாதனையாளாராக திகழ்பவர்.


கோ.க‌ண்ண‌ன்

த‌மிழ் நாவ‌ல்க‌ளில் த‌லைமுறை இடைவெளி எனும் த‌லைப்பில் ஆய்வு மேற்கொண்டு தர்ம‌புரி மாவ‌ட்ட‌த்தின் முத‌ல் பார்வைய‌ற்ற‌ முனைவ‌ராக‌ சிற‌ப்பிக்க‌ப்ப‌ட்ட‌ இவ‌ர், 'ஓசைக‌ளின் நிற‌மாலை', 'மழைக்குடை நாட்க‌ள்' போன்ற‌ க‌விதை நூல்க‌ளை வெளியிட்டுள்ள‌ கவிஞ‌ராக‌வும் த‌ன்னை அடையாளித்துக் கொண்டுள்ளார். த‌ர்ம‌புரி அர‌சு க‌ல்லூரியில் த‌மிழ்த்துறை இணைப் பேராசிரிய‌ராக தற்போது பணியாற்றி வ‌ருகிறார்.

ஒரு ப‌டைப்பாளி த‌ன்னுட‌லின் ஐம்புல‌ன்க‌ளை கூர்மைப்ப‌டுத்தி, தான் க‌ண்ட‌டைகிற் நிக‌ழ்வுக‌ளுக்குள் உட்புகுந்து, சிந்த‌னாவ‌ய‌ப்ப‌ட்டு, த‌ன்னை பாதிக்கிற‌ நுண்ணிய‌ நிக‌ழ்வுக‌ளையே ப‌டைப்பில‌க்கிய‌மாக‌ உயிர்ப்பிக்க‌ இய‌லும் என்கிற‌ கால‌ங்கால‌மான‌ நிய‌தியை மாற்றிய‌மைத்த‌ ப‌டைப்பாளியான‌ இவ‌ர், 'ஊன‌முற்றோரின் உய‌ரிய சாத‌னைகள்' நூலிலும் இட‌ம் பெற்ற‌ சாத‌னையாள‌ர்.

இரா.சும‌தி

சிறுவ‌ய‌திலிருந்தே நாட்குறிப்பு எழுதிய‌ அனுப‌வ‌முடைய‌வ‌ராக‌ இருந்த‌தால் த‌ன‌து எழுத்தின் மூல‌ம் ந‌வீன‌ வார்த்தைக‌ளை அறிமுக‌ப்ப‌டுத்திக் கொண்ட‌வ‌ருக்கு தான் ச‌ந்திக்க‌ நேர்ந்த‌ நிக‌ழ்வுக‌ளை காலத்தின் ப‌திவுக‌ளாய் க‌விதையாய் உருவாக்குவ‌து எளிதான‌து.

இளம்பிள்ளைவாத‌ பாதிப்பால் ஊன‌ம‌டைந்த‌ இவர் ம‌ன‌வ‌லிக‌ளிலிருந்தும் மீண்டு ச‌மூக‌ம் குறித்து சிந்திக்க‌, ஆன்மீக‌ அனுப‌வ‌ங்க‌ளை ப‌கிர் ந்து கொள்ளும் நோக்கில் இவ‌ரின் க‌வியாற்ற‌ல் வெளிப்ப‌டுகிற‌து.

சே.ஜெய‌க்குமார்

பெர‌ம்ப‌லூரில் பிற‌ந்த‌ இவர், த‌ற்போது ம‌ருந்தாளுன‌ராக‌ பெங்க‌ளூருவில் ப‌ணியாற்றுகிறார். கலை ஆர்வ‌மும், ச‌மூக‌ ந‌ல‌ச்சிந்த‌னைக‌ளும் மிகுந்து காண‌ப்ப‌டும் இவர், இள‌வ‌ய‌திலேற்ப‌ட்ட‌ போலியோ பாதிப்பின் கார‌ண‌மாக‌ இரண்டு கால்க‌ளும் பாதிப்ப‌டைந்தவ‌ர்.

சங்க‌ட‌ங்க‌ளை ச‌கித்துக் கொள்ளும் திற‌னும், விடா முய‌ற்சியும் கொணட‌ இவ‌ரின் உள்ள‌த்து இய‌ல்பை, ந‌தியின் நீரோட்ட‌த்துக்கு ஒப்பிட‌லாம். 'சாத‌னை ப‌டைக்கும் ஊன‌முற்ற‌வ‌ர்க‌ள்‍‍ பாகம் 1' புத்த‌க‌த்தில் இட‌ம் பெற்ற‌ சாத‌னையாள‌ர்.

எழில் அரசன்

கலைத்துறையில் ஆர்வம் கொண்டதன் காரணமாக கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் அதிகமான‌ கவிதைக‌ளை எழுதிவைத்தும், வெளியிட வாய்ப்பின்மையால் தன்னுடைய திறமையை முடக்கி வைத்துக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார்.

ஒரு விபத்தில் வலக்கையை இழந்த போதிலும், மற்றையோருக்கு வழிகாட்டும் விதமாக‌ சென்னையிலுள்ள மாஸ் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வருவதுடன், சமூக சேவையியலில் முதுகலை பட்டம் பயின்று வருகிறார்.

வெ.எழில‌ரசன்

கல்வித்துறையிலும் கணினித்துறையிலும் இருபதாண்டுகால அனுபவமுள்ளவர். மூன்று வயதிலேற்பட்ட போலியோவின் பாதிப்பால் வலது கையும், காலும் பாதிப்படைந்தன. எனினும் தொடர்ந்த பயிற்சிகளின் விளைவால் இடக்கையாலேயே தட்டச்சு செய்தல், ஓவியம் வரைதல், டேபிள் டென்னிஸ் மற்றும் ஷட்டில் கார்க் போன்ற உடலியல் சார்ந்த விளையாட்டுகளில் பங்கேற்றல் என பல்துறை சார்ந்த செயல்பாடுகளை மேற்கொண்டு வருபவர்.

தன்னுடைய தெளிந்த ஆங்கிலப் புலமையால் ஆங்கில பயிற்றுவிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார். 'மாற்றுத்திற்ன் சாதனைச் சிகரங்கள்' நூலில் இடம்பெற்ற சாதனையாளர் இவர்.

மு. அர்ச்சுணன்

எதிர்பாராத மின் விபத்தொன்றில் பாதிப்படைந்து இரண்டு கைகளும் செயலிழந்த இவர், பொம்மை வார்ப்புக் கலை, ஓவியக்கலை போன்ற திறமைகளுடன், கவிதை வார்ப்புத்திறனும் மிகுந்து காண்ப்படுகிறார்.

பல மாற்றுத்திறன் ஆடவர்களை ஒருங்கிணைத்து 'பொதிகை மாற்றுத்திறன் படைத்தோர் ஆடவர் சுய உதவிக்குழு' எனும் சுயசார்பு முயற்சியினால் தன்னையொத்த பலருக்கு பொருளாதாரச் சுதந்திரத்தை ஏற்படுத்தித்தரும் அற்புத முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சுற்றுச்சூழல் குறித்த கவிதை இவரின் சமூக நலன் பேணும் ஆர்வத்தை எடுத்தியம்புகிறது.

பொன்.கதிரேசன்

தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றும் இவரின் தமிழார்வம், இவரை பல தளங்களுக்கும் அழைத்துச் சென்று கௌரவித்திருப்பது கண் கூடு. போலியோவின் பாதிப்பால் கால் ஊனமுற்ற இவரின் தமிழ்ப்பயணங்கள் பல தடைகளைத் தாண்டி நீளுகின்றன. 'மாற்றுத்திறன் சாதனைச்சிகரங்கள்' நூலில் இவரின் சாதனை வாழ்க்கை பதியப்பட்டுள்ளது.

ஆய்வியல் நிறைஞ‌ர் பட்டம் பெற்றுள்ள இவர், தேசிய அளவிலான கருத்தரங்கங்களில் பங்கேற்று, தன்னுடைய படைப்பாளுமையை உலகத்தின் முன் சமர்ப்பித்து வருவதோடு, தனது சீரிய செயல்பாடுகளால் முன்னுதாரண மனிதராகவும் திகழும் இவர், விரைவில் நூலாசிரியராகவும் வெளிப்பட உள்ளார்.


கவி.பெரியசாமி

இளம்வயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்ட போதிலும், தன்னை ஒரு கவிஞனாக‌ அடையாளப்படுத்திக் கொண்டு திருச்சி, சென்னை, காரைக்கால் போன்ற வானொலி நிலையங்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளது மட்டுமல்லாமல் 'காகித உதடுகள்' எனும் கவிதை நூலை வெளியிட்ட நூலாசிரியராகவும், தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரையாளராகவும், அறியப்பட்டுள்ள இவர் திரைப்பட பாடலாசிரியராக முத்திரை பதிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ள பன்முகப் படைப்பாளி.

தான் ந‌ட‌த்திவ‌ரும் ஆத்ம‌ பெருமாள் ச‌மூக‌ப்ப‌ணி தொண்டு நிறுவ‌ன‌த்தின் வாயிலாக‌ ப‌ல்வேறு சமுதாய‌ப்பணிக‌ளையும் செய‌லாற்றி வ‌ருகிறார். விரைவில் 'ப‌தினாறு வ‌ய‌துக்காரி' என்ற‌ க‌விதை நூலையும் வெளியிட‌ எண்ணியுள்ளார்.

துளிர்

மதுரையைச் சேர்ந்த இவர் இளம்பிள்ளை வாத பாதிப்படைந்த போதிலும், இலக்கியவுலகில் வலம் வந்து கதை, கவிதை, கட்டுரை, கவிதைத் தொடர் போன்றவற்றை பல்வேறு இதழ்களில் எழுதுவதோடு மதுரை வானொலி நிலையம் ம‌ற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் பகுதிநேரப் பணியாற்றியபடி இலக்கிய மன்ற்ங்களில் உரையாற்றல் என பல தளங்களிலும் செயல்பட்டு வருகிறார்.

"கைக்குட்டைக்குள் தொலைந்த வானம்" என்கிற தலைப்பில் பால்யகால உணர்வுகளை பகிர்ந்து கொள்கிற கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளதோடு, வானொலி அறிவிப்பாளருக்கான சிறப்புப் பயிற்சியை பெற்று புதிய பாதையில் பயணிக்கிறார்

இரா.பாக்கியராஜ்

இளமையிலேயே கண்பார்வைக் குறைபாட்டு நிலையேற்பட்ட போதிலும், முயன்று படித்து, புத்தக பைண்டிங் பயிற்சி பெற்று திருச்சி அரசு அச்சகத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்திய பார்வையற்றோர் சங்கத்தின் உறுப்பினராக செயல்பட்டபடி, பார்வையற்றோருக்கான நலவியல் சார்ந்த செயல்பாடுகளை மேற்கொண்டு வரும் இவரது தமிழார்வம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

இராமானந்த குரு

குழந்தைப் பிராயத்திலேயே இளம்பிள்ளை வாதத்தால் கடுமையாக பாதிக்கப்ப‌ட்டதால், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு குழந்தைபோல தூக்கிச் செல்ல வேண்டிய நிலையில் வாழ்பவர். எனினும், அருமைச் சீடர்களின் துணையோடு, இவரது சமூகத் தொண்டுகள் நீளுகின்றன. "உள்ளங்கையில் சிகரம்", "இறப்பிற்கும் பிறப்பிற்கும் நடுவில்", "யார் ஞானி?" எனும் மூன்று புத்தகங்களை எழுதியுள்ளதோடு மட்டுமல்லாமல், ஆன்மீகச் சொற்பொழிவுகள், கேள்வி‍‍ பதில்கள், தொலைக்காட்சி பங்கேற்புகள் என தமிழகம் முழுவதும் அறியப்பட்ட ஆன்மீக அறிவொளியாகத் திகழ்கிறார்.

இவரின் செயல்பாடுகளைப் பாராட்டி 'பாரதி பணிச் செல்வர்' விருது, சாதனையாளர் விருது, 'சமுக சேவா ரத்னா' விருது போன்றவை வழ‌ங்கப்பட்டுள்ளன. இவரின் வாழ்க்கை வரலாறு 'ஊனமுற்றோரின் உயரிய சாதனைகள்' நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது

Tuesday, December 29, 2009


ஆ.தங்கராஜு

சேலம் மாவட்டம் செங்கர‌டு பகுதியைச் சேர்ந்த இவர், ஆசிரியப் பயிற்சிக்கான பட்டயப்படிப்பை மேற்கொண்டுள்ளார். வருங்காலத் தலைமுறையை உருவாக்கும் ஆசிரியப்பணியின் உன்னதம் கருதி, இப்பயிற்சியை மேற்கொண்டுள்ள இவரின் சமுதாய நலனை உண்மையிலேயே பாராட்டலாம். கால்களில் பாதிப்பையடைந்துள்ள இவரின் மன‌வலிமை பாராட்டத்தக்கது.

ஆ.இராஜேந்திரன்

திருச்சி வானொலியின் வளரும் கவிஞ‌ர் பகுதி, காஞ்சி கவிஞர் மன்றம், காரைக்குடி கண்ணதாசன் கவிமன்றம் போன்றவற்றில் பங்கேற்று தன் கவித்திற‌னை உலகினுக்கு உணர்த்திய இவர், பேருந்து விபத்தொன்றில் முதுகெலும்பு வளைந்து பாதிப்படைந்தார்.

சுதந்திரப் பொன்விழா ஆண்டில் அமிர்த ஜோதி அமைப்பு நடத்திய மாநிலம் தழுவிய கட்டுரைப் போட்டியில் 'இனிவரும் இந்தியா' எனும் தலைப்பில் கட்டுரை எழுதி, பாரதிதாசன் பல்கலைக்கழக் துணைவேந்தரின் கரங்களால், கேடயப்பரிசு பெற்றவர் என்பதே இவரின் எழுத்து வன்மையை அடையாளிக்க வல்லதாக திகழ்கிறது. பொதுந‌ல நோக்கில் சமூகப் பங்களிப்புகளும் மேற்கொண்டு வருகிறார்.

மு.குமார்

தேனியைச் சேர்ந்த இவருக்கு இளவயதிலேயே ஏற்பட்ட இளம்பிள்ளைவாத பாதிப்பால், இரண்டு கால்களும் செயலிழந்தன. எனினும் கல்வியை விடாமல் இறுகப்ப‌ற்றி இடைநிலை ஆசிரியர் பயிற்சியை முடித்தார். கல்லூரி காலத்திலேயே இலக்கியத்தில் ஏற்பட்ட ஆர்வத்தினால் கதை, கவிதை, நகைச்சுவை துணுக்குகள் படைத்தளிக்கும் பன்முகப் படைப்பாளியாக விளங்குகிறார்.

செ.முருகேசன்

நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தைச் சேர்ந்த இவர் இளவயதிலேயே இளம்பிள்ளைவாதத்தால் இரண்டு கால்களும் முழுமையாக பாதிப்படைந்த காரணத்தால் தவழ்ந்தே செல்லும் நிலையடந்தவர். எனினும் பயின்ற இளங்கலை வணிகவியல் பட்டம் தந்த அறிவால் பள்ளி மாணவர்களுக்கு தனிப்பயிற்சி எடுத்து சொந்தக்காலில் நிற்கிறார். கவிதைகள் மீதான ஆர்வம் பேனா பிடிக்கத் தூண்டியுள்ளது.

இரா.செல்வராஜ்

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் தன்னுடைய பத்தொன்பதாம் வயதில் உயரத்திலிருந்து தலைச்சுமையோடு தவறிக்கீழே விழுந்ததால், முதுகில் தண்டுவடத்தில் பாதிப்பேற்பட்டு உடற்குறையடைந்தார்.

இந்த விபத்தினால் மார்புக்குக் கீழே செயலிழந்து, சக்கர நாற்காலி வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டார். எனினும், தணியாத ஆர்வத்தோடு 'கவிச்சிதறல்' தொகுப்பிலும் பங்கெடுத்து தன்னுடைய கவித்திறனை உலகறியச் செய்ய முனைந்துள்ளார்.

ம‌.பாலன்

புதுச்சேரியில் ஆசிரியராக பணியாற்றி வருவதுடன், புதுவை மாநில உடல் ஊனமுற்றோர் நலவாழ்வுச் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், ஊனமுற்றோர் பள்ளியின் பொருளாள‌ராகவும் செயல்பட்டு சமூக மேம்பாட்டிற்கான தன்னுடைய பங்களிப்பை செய்து வருகிறார்.

ஓவியம், சிறுகதை, புதுக்கவிதை, கட்டுரை எனப் பல்வேறு வடிவங்களில் சிந்தனையை வெளிப்படுத்தும் நல்லதொரு எழுத்தாளர். நாட்டுப்புறப்பாடல் தொகுப்பாள்ர் எனப்பன்முக ஆளுமைகளோடு திகழும் இவர், இதுவரை 'மழலையர் பாடல்கள்', 'தந்தைமை' போன்ற கவிதை நூல்களை வெளியிட்டு உள்ளார். மேலும் இவ்வாண்டின் இறுதியில் 'அம்மா' எனும் சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட உள்ளார்.

ஜி.ஆல்டிரின் பிரிட்டோ

தமிழ் இதழியல் உலகில் மாற்றுத்திறனாளர்கள் குறைவு என்கிற குறைபாட்டை களையும் நோக்கில் சக்கர நாற்காலியில் வாழ்ந்தபடி, கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 'அமுதம்' மாத இதழை வெளிக்கொண்டு வருகிறார். தனது முழுநேரப் பணியாகவே இதழியலை மேற்கொண்டுள்ள இவர், பிரபல படைப்பாளிகளின் பயனுள்ள படைப்புகளால் இதழை அலங்கரிக்கிறார்.

சமூக மாற்றங்களை எதிர்நோக்கும் பார்வையோடு வாழ்ந்து வரும் இவர் ஒரு முழுமையான இணைய வழி தகவல் களஞ்சியத்தை எதிர்காலத்தில் உருவாக்கும் முனைப்போடு செயலாற்றி வருகிறார்.

சித்தை பா.பார்த்திபன்

தமிழன்னைக்கு திருக்கோயில் ஒன்றினை உருவாக்க வேண்டும் எனும் முனைப்போடு 'அனைத்துலகத் தமிழ் மாமன்றம்' எனும் அமைப்பை நிறுவி செயல்படுகிறார். 'புதிய தென்றல்', 'மன்ற முரசு' போன்ற தமிழார்ந்த இதழ்களையும், உடல் ஊனமுற்றோரின் சாதனைச் செய்திகளை வெளிக்கொண்ரும் நோக்கிலான 'தன்னம்பிக்கை ஊன்றுகோல்' எனும் இலவச இதழையும் வெளியிட்டு வரும் தமிழ்ப்பற்றாள‌ர்.

முதுகுத் தண்டுவடப் பாதிப்பேற்பட்டதன் காரணமாக கை, கால்கள் செயலிழந்திருந்தாலும் கூட, கதை, கவிதை, கட்டுரை, பாடல், நாடகம், மேடைப் பேச்சு, கவியரங்கம், பட்டிமன்றம் என நீளுகிறது இவரின் நாவன்மை.

பொன் முரு.காமராசன்

இளமையிலேயே இளம்பிள்ளை வாதத்தால் வலது கையும், இடது காலும் பாதிப்படைந்த போதிலும், முதுகலை தமிழ் பயின்று, ஆய்வியல் நிறைஞ‌ராக உயர்வுற்று, கல்வியியலில் இளங்கலை பட்டம் பெற்று, கரூரில் தமிழாசிரியராக‌ பணியாற்றி வருகிறார்.

இந்திய தேசிய கலைத்துறை அணியின் இணைச்செயலர், அனைத்துலகத் தமிழ் மாமன்றம் என இலக்கியப்பங்களிப்புகளோடு கவியரங்கம், பட்டிமன்றம் என மேடைப் பேச்சுக்கலையிலும் கலக்கி வருகிறார்

வேம்பை தி.பாலாஜி

தனது சொந்த ஊரான வேம்படிதாளம் பகுதியை பெயரோடு இணைத்து புனைப்பெயராகக் கொண்டபடி, வாசக எழுத்தாளராய் தன் எழுத்துலகப் பயணத்தை துவங்கி, தொடர்ந்து வார இதழ்கள், சிற்றிதழ்கள் போன்றவற்றில் புதுக்கவிதைகள், ஐக்கூ கவிதைகள், சிறுகதைகள் படைத்தளித்து முத்திரையை பதித்துவருகிறார்.

மும்பை தமிழ்ச்சங்கம் தொகுத்தளித்த 'அணிவகுப்பு', கவிஞ‌ர் சித்தை.பா.பார்த்திபன் தொகுத்த 'கலைஞ‌ர் கவிநானூறு', 'கவிச்சோலை' போன்ற பல நூல்களில் கவிதை யாத்ததன் மூலம் தன்னுடைய சிந்தனையாற்றலை அடையாளித்து இலக்கிய உலகில் வலம் வருகிறார். மேலும், 'அனைத்துலக தமிழ் மாம்ன்றம்' அமைப்பின் சேலம் மாவட்ட அமைப்பாளராக‌வும் செயலாற்றி வருகிறார்.

சின்னப்பா கணேசன்

திரைத்துறையில் மாற்றுத்திற‌னாள‌ர்க‌ள் வெற்றிக்கொடி நாட்டுவ‌து மிக‌ அரிது எனும் கூற்றை உடைத்து, 'அண்மைக்கால‌மாய்'... எனும் திரைப்ப‌ட‌த்தை இய‌க்கி வ‌ரும் இவ‌ர் க‌ன்னியாகும‌ரியில் பிற‌ந்த‌வ‌ர். ஒரு விபத்தில் இட‌க்காலை இழந்தாலும், இருப‌தாண்டுகள் உத‌வி இய‌க்குந‌‌ராக‌ இருந்து தற்போது இய‌க்குந‌‌ராக‌ வ‌ள‌ர்ந்துள்ளார்.

கலாச்சார சீர்கேட்டுக்கு வழி வகுக்கும், திருமணமின்றி சேர்ந்து வாழும் முறையைச் சாடி திரைப்படம் இயக்கி வரும் இவர், ஈழத்தமிழச்சியை திருமணம் முடித்து தன் கொள்கைப்படி மணவாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்.

வெ.தமிழழகன்

அரசுப்பணியாளரான இவர் எழுத்துலகில் தொடாத துறைகளே இல்லை. சிறுகதை, தொடர்கதை, நாவல், கவிதை, சிறுவர் பாடல், மருத்துவ, சட்ட மற்றும் நகைச்சுவை கட்டுரைகள் போன்றவற்றை தமிழின் பிரபல இதழ்களில் எழுதி இருபதாண்டுகளாக எழுத்துலகில் வெற்றிகரமாக வலம் வருகிறார்.

சேலம் கே.ஆர்.ஜி. அறக்கட்டளையின் 'சிறுகதை சாதனையாள்ர்' விருது பெற்றுள்ள இவர் எழுதி வெளியிட்டுள்ள புத்தகங்களின் எண்ணிக்கை ஐம்பதைத் தொடுகிறது. காலின் பாதிப்பைக் கடந்தும், பேனாவின் வலிமையால் புகழேணியில் உயர்ந்து நிற்கிறார்.


த. நளினி

மாற்றுதிறனாளிகளுள் நல்ல குரல் வலம் கொண்டோரை தேர்வு செய்து, வானொலி அலைவரிசைகளில் அறிவிப்பாளராக பணியமர்த்தும் நோக்கில், இந்தியாவிலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளர்களுக்காக நடத்தப்பட்ட ஒரு வார கால 'ஆர்.ஜே' எனப்படுகிற 'ரேடியோ ஜாக்கி' பயிற்சி பெற்றுள்ள இவர், பிறவியிலேயே தண்டுவட பாதிப்பால் இரண்டு கால்களும், இடது கையும் பாதிப்படைந்தவர்.

தடைகளை தாண்டி, முயன்று, முதுகலை கணினி முடித்துள்ள இவருக்கு எந்தத்துறையில் செயல்பட்டாலும், தனக்கென தனித்த அடையாளம் பதிப்பது பிடித்தமான செயல். எதிர்காலத்தில் ஊடகத்துறையில் வலம்வர உறுதிகொண்டு செயலாற்றுகிறார்.

க‌.மாரிமுத்து

கல்லூரிக்காலத்திலேயே 'தமிழய்யா கல்விக்கழகம்' வழங்கிய 'கவியரசு' விருது பெற்ற இவர், தனது ஒன்றரை வயதிலேற்பட்ட இளம்பிள்ளை வாதத்தால் கால்களில் பாதிப்படைந்தவர். சோதனைகளைத் தாண்டி ஆய்வியல் நிறைஞ‌ர் பட்டம் பெற்றுள்ளார்.

கவிதை, சிறுகதை, கட்டுரை என பலதுறை எழுத்தாக்கங்களிலும் கால் பதிக்கும் இவருக்கு, மாற்றுத்திறன் படைத்தோரைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற‌ ஆசை.

Monday, December 28, 2009


கா. இளையராஜா

கடந்த இருபதாண்டுக் காலமாக பல வார, மாத இதழ்களில் இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கவிதைகள், துணுக்குகள் போன்றவற்றை எழுதியுள்ளதோடு, 'ஆத்தா வந்திருக்கிறேன்' என்கிற தலைப்பிலான சிறுகதைத் தொகுப்பு நூலையும் வெளியிட்டுள்ள நல்ல சிறுகதை எழுத்தாளர்.


'குங்குமம்' வார இதழின் கவிதைப் போட்டியில் தேர்வாகி பரிசு பெற்றதை இவரின் எழுத்தாற்றலின் அடையாள‌மாக எண்ணலாம். கடந்த ஆண்டு நிகழ்ந்த விபத்தொன்றில் ஒரு கண்ணின் பார்வையை இழந்தவர்.

ஆரோக்கியமேரி

மூளை வளர்ச்சி குன்றிய மற்றும் உடல்நிலை பாதிப்புள்ள நிலையில் வாழ நேரிடுகிற இயலாக்குழந்தைகளின் எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் துவங்கப்படுகிற சிறப்புப் பள்ளிகளில் ஒன்றான தாரமங்கலம் எக்காம்வெல் சிறப்புப் பள்ளியின் தலைமையாசிரியையாகப் பணியாற்றும் இவர் 'ஊனமுற்றோரின் உயரிய சாதனைகள்' நூலில் இடம்பெற்ற சாதனையாளர்.

போலியோவின் பாதிப்பை மீறி, பட்டிமன்றங்களில் பங்கேற்று கருத்துரையாற்றுதல், சமூக விழிப்புணர்வுப் பாடல்களை இயற்றி அவற்றை அனைவருக்கும் கல்வி இயக்க விழிப்புண‌ர்வு முகாம்களில் பாடி சிந்திக்கச் செய்தல் என தொடர்ந்த செயல்பாடுகளோடு திகழ்கிறார்.

தி.சுபத்ரா

கணினிக் கல்வியில் இளங்கலை பட்டம் பெற்ற இவர், தன்னுள் கிளர்ந்தெழுந்த தமிழின் மீதான தாகத்தால் தமிழிலக்கியத்தில் இளங்கலை (B.Litt) பட்டத்தையும் பெற்றுள்ளார் என்பது தமிழ் மொழியின் உன்னதத்தை உலகுக்கு உண‌ர்த்துகிற உயரிய செய்தி.
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் அமைந்துள்ள எக்காம்வெல் மறுவாழ்வு மையப்பள்ளியில் உடலூனமுற்ற மற்றும் மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கான ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். 'கவிச்சிதறல்' படைப்புகளின் வாயிலாக தன்னை ஒரு கவிஞ‌ராகவும் அடையாளித்துக் கொண்டிருக்கிறார்.

பி.மாரியம்மாள்
திருநெல்வேலி மாவட்ட மழை மறைவுப் பகுதியான ஆய்க்குடி எனும் சிற்றூரிலுள்ள உடல் ஊனமுற்றோருக்கான மிகப்பெரிய மறுவாழ்வுக் கேந்திரம் 'அமர்சேவா சங்கம்'. அதன் அரவணைப்பில் வளரும் மாணவி மாரியம்மாள், கவிதைகள் எழுதும் ஆர்வம் கொண்டுள்ளதோடு, சக்கர நாற்காலியே வாழ்க்கையான போதிலும் சலிக்காத மனங்கொண்டிருப்பதால், அமர்சேவா சங்கத்தின் ஏனைய பிள்ளைகளுக்கு வழிகாட்டியாகவும் திகழ்கிறார்.

பி.இராமலட்சுமி
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இவருக்கு, மூன்று வயதிலேற்பட்ட இளம்பிள்ளை வாதத்தால் இரண்டு கால்களும் பாதிப்படைந்தது. பள்ளிப்பருவத்திலேயே எழுதும் ஆர்வமிருந்தபோதிலும், தட்டிக்கொடுக்க யாருமில்லாக் காரணத்தால் திறமையை தன்னுள்ளேயே மறைத்துக் கொண்டார். அமர்சேவா சங்கத்தில் இணைந்தப்பின் திறமையைப் பட்டை தீட்டிக் கொள்ளும் வாய்ப்புகள் ஏற்பட "கவிச்சிதறல்" தொகுப்பால் வெளிப்பட்டு உங்கள் கவனத்தை கவர்ந்துள்ளார்.

மு.பிரியா

பிறவியிலேயே உடற்குறையுடன் பிறந்த இவர், கல்வியறிவற்ற பெற்றோருக்குப் பிறந்ததாலோ என்னவோ கல்விகற்கிற தாகம் இவருள் ஊற்றெடுத்த வண்ணமிருந்தது. எனினும் நினைவாற்றல் குறைபாட்டு நிலையிருந்ததால் படித்ததை நினைவில் நிறுத்திக்கொள்ள இயலாமல் தடுமாறியவருக்கு, அடைக்கலமளித்து வழிகாட்டி, நடனம், கவிதை போன்ற கலைத்திறமைகளையும், தைய‌ல் மற்றும் பொம்மைகள் தயாரித்தல் போன்ற கைத்தொழில்களையும் கற்றுத்தந்து வாழ்வில் நம்பிக்கை ஏற்படுத்தி வருகிறது அமர்சேவா சங்கம்.

ப‌.லெனின்
கலை இலக்கியம் யாவும் சமூக விழிப்புணர்வை நோக்கியே அமைய வேண்டும் என்பதை தனக்கென இலக்காகக் கொண்டு வீதி நாடகக் கலைஞ‌ராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணித்து செயலாற்று வரும் இவர் பார்வையற்றவர்.

கிராமிய மணத்தோடு கமழும் தெம்மாங்கு இசையை தன் ஊடகமாகக் கொண்டு, அறிவொளி இயக்கம், எழுத்தறிவு இயக்கம் போன்ற இயக்கங்களின் செயல்பாட்டில் தோள் தந்து, பெண் சிசுக் கொலை, எய்ட்ஸ், தீண்டாமை, குழந்தைத் தொழிலாளர் போன்ற சமூகச்சிக்கல்களைக் களைய விழிப்புணர்வேற்படுத்தி சமூகப்பணியாற்றுகிறார்.

கா.சங்கீதா
விருதுநகரில் வசிக்கும் இவர், பிறக்கும் போதே பல்வேறு உடற்குறைபாடுகளுடன் பிறந்து சென்னை, மும்பை போன்ற நகரங்களில் பயின்று சிறந்த பேச்சியல் மற்றும் கேட்பியல் நிபுணராக் உருவாகியுள்ளார். இவர் 'ஊனமுற்றோரின் உயரிய சாதனைகள்' நூலில் இடம் பெற்ற சாதனையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக நற்கருத்துக்களை விதைத்து வரும் இவர் மக்களை ஈர்க்கும் கோடைப் பண்பலையில் (கோடை FM) பேசி தன் வாழ்வியல் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட சிறப்புத் தகுதியாள‌ர்.

அர.செயச்சந்திரன்

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பார்வையற்றோருக்கான மென்மங்களைத் தயாரிக்கும் பணிக்கான தமிழியல் ஆய்வு மையத்தின் தலைவராக செயலாற்றி வரும், இவர், உலகக் கருத்தரங்குகளில் பங்கேற்று, பார்வையற்றவர்களுக்கு கணினியை செயற்கைக் கண்போல பயன்படுத்துவது எந்தளவு சாத்தியம் என்று தன் எண்ணவோட்டங்களை பகிர்ந்து கொண்டவர்.

எல்லா வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் இணையப் பயிற்சியளிக்கும் கல்லூரி துவக்குவதன் அவசியம் குறித்து வலியுறுத்தியும், பல்வேறு தலைப்புகளில் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ள இவர், கண் நோயால் பார்வையிழந்த போதிலும், ஐந்து புத்தகங்களை எழுதிய எழுத்தாளராகவும் திகழ்கிறார்.

Monday, December 14, 2009

பூர்ணோதயா கலையரசி

திருச்சி திருவானைக்கோவில் பகுதியில் மாற்றுத்திறன்(உடல் ஊனமுற்ற) மகளிரின் வாழ்வியல் மேம்பாட்னையும் பொருளாதார மேம்பாட்டினையும் கருத்தில் கொண்டு கடந்த ஏழு ஆண்டுகளாக பூர்ணோதயா தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார் பெ.கலையரசி அவர்கள். வளமையான குடும்பத்தில் பிறாந்த இவர் தன்னுடைய இளம் வயதிலேயே உடலில் ஏற்பட்ட போலியோவின் பாதிப்பால் பலப்பல துயரங்களை அடந்தார். எனினும், தன்னுடைய மனவலிகளை மறப்பதற்காகவே பொதுச்சேவையில் நாட்டம் கொள்ளத் துவங்கினார். ஆனால் போலியோவால் பாதிக்கப்பட்டு உயரக்குறைவு ஏற்பட்டும் தன் குடும்பம் பரிசாய்த் தந்த அன்பையும் நம்பிக்கையையும் எண்ணி உவகையுற்ற கலையரசி தனக்குக் கிடைத்த இத்தகைய அன்பும், சுதந்திரமும் பலப்பல மாற்றுத்திறான் மகளிருக்குக் கிடைக்காததை எண்ணி வருந்தினார். அத்தகைய பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்றால் தான் அவர்களுக்கான சமூக சுதந்திரம் சாத்தியம் என்பதை உணர்ந்தார். அந்த நொடியிலிருந்து மாற்றுத்திறன் கொண்ட மகளிரின் பொருளாதார மேம்பாடு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயலாற்ற ஆரம்பித்தது பூர்ணோதயா தொண்டு நிறுவனம். அத்தகைய மாற்றுத்திறன் பெண்களுக்காக தையல், பெயிண்டிங், கணினி, பொம்மை தயாரிப்பு, செயற்கை நகை தயாரிப்பு, நாப்கின் தயாரிப்பு, காகிதப்பைகள் தயாரிப்பு எனப்பல துறைகளிலும் பயிறிசி அளித்து அவர்களின் தயாரிப்பு பொருட்களுக்கான விற்பனை வாய்ப்பையும் ஏற்படுத்தித் தந்து சுயமாக வருவாய் ஈட்ட வழி காண்பித்து நம்பிக்கை தீபங்களை ஏற்றி வைக்கிறது பூர்ணோதயா.

தனக்கான ஒவ்வொரு சின்ன சின்ன தேவைகளுக்கும் கூட அப்பாவையோ அண்ணன் தம்பியையோ எதிர்பார்க்க வேண்டிய நிலையிலிருந்த பல மாற்றுத்திறன் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை ஏற்படுத்தி தந்ததை பாராட்டும் விதமாக தமிழக அரசு கடந்த ஆண்டு உலக ஊனமுற்றோர் தினத்தன்று சிறாந்த ஊனமுற்ற பணியாளர் விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

இந்நிகழ்வு இந்நிறுவனத்தின் பல்லாண்டுகால தன்னலமற்றா பொது சேவைக்கான மிகப்பெரிய அங்கீகாரமாக அமைந்து சிறப்பது கண்கூடு. பொதுவாக உடல் ஊனமுற்ற நபர்களுக்கான வாழ்வியல் மேம்பாட்டில் நலமான நபர்களே ஈடுபடுவர். தங்களை சமூக நல விரும்பிகளாக அடையாளப்படுத்திக் கொள்ளவும் விளைவர். ஆனால் தனக்கான வலியை அனுபவித்து, பீனிக்ஸ் பறவைப்போல அதனிலிருந்து மீண்டெழுந்த ஒரு உடற்குறையுற்றவர், தன்னை போன்றவர்களை வலியில் இருந்து மீட்டெடுக்க முயல்கிறார் என்பதே பூர்ணோதயா தொண்டு நிறுவனம். மக்களின் மனங்களில் நம்பிக்கை நட்சத்திரமாய் திகழக் காரணமாகிறது என்பது காலம் நமக்குச் சொல்லும் உண்மை.